நான் ரசித்தவை

நான் ரசித்ததில் பிடித்தது

Sunday 22 March 2015

கண்ட நாள் முதல்


கொழும்பு விமான நிலையம் என்றும் போல் அன்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்க போகின்ற விமானங்களின் வருகைக்காக காத்திருக்கும் மக்கள். லண்டனில் இருந்து வரும் விமானத்தில் பார்கவி தாய் நாட்டிற்கு திரும்புகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தாலும் ஏதோ மனதில் நெருடியது. என்றும் இல்லாத ஒரு சலனம் மனதில் எல்லாம் இந்த விமான பயணத்தினால் ஏற்பட்டது.
பார்கவி இரண்டு வருடங்களாக லண்டனில் ஹொட்டெல் மனேஜ்மென்ட் படித்து முடித்து விட்டு தற்போது நாடு திரும்புகிறாள். விமானத்தில் ஆரம்பதிலேயே வந்து அமர்ந்து விட்டதால் ஒரு சில பயணிகளே காணபட்டனர். சிறிது நேரத்தில் எல்லோரும் வந்துவிட இறுதியாக அவன் வந்தான்., மாநிறம் ஆறடிக்கும் சற்று கூடுதல் உயரம் திடமான உடற்கட்டு தவறாமல் உடற்பயிற்சி செய்வான் போல பார்கவி விழிமூட மறந்து வியந்து பார்த்தாள். தனக்கே தன்செயல் அதிசயமாய் தானா இப்படி ஒரு ஆடவனை அதுவும் இவ்வளவு உன்னிப்பாக அவதானிப்பது கண்டதும் காதல் என்பார்களே அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டது. அவளுக்கே ஒரு மாதிரியாக ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள். பக்கத்து சீட்டில் அரவம் கேட்க திகைத்துப்போனாள். அவனே அதுவும் அவள் அருகில் மனம் எல்லாம் பல பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன என்ன இது புது விதமான படபடப்பு அதுவும் சுகமாய்....
இதுதான் காதலா தோழிகள் சொல்ல கேட்டிருகிறாள் இது மாதிரியான அனுபவங்களை, ஆனால் அதெல்லாம் இருமனம் இணைந்த காதல் இது தன் மனம் மட்டும் தானே இப்படி அவன் தன்னை கண்டுகொண்டதாகவே தெரியவில்லையே.
சகபயணிக்கு ஒரு ஹலோ கூடவா சொல்லகூடாது என்று எண்ணும் போதே அவள் காதில் அது கேட்டது ஹலோ நான் ப்ரணவ். இவளும் பதிலுக்கு சிரித்து நான் பார்கவி என்றாள். 
ஒரு ஆணின் சிரிப்புக்கூட இவ்வளவு கவர்ச்சியா என்று தோன்றியது. அவன் தொழில் விஷயமாக இலங்கை போவாதாக சொல்ல தான் படிப்பு முடிந்து போவதாக சொன்னாள். பின்னர் இருவருக்கும் இடையில் மெளனம் தான் மொழி பேசியது.
பார்வைக்கு கண்ணியமானவனாக தோன்றினான். வழிசல் கிடையாது ஆனால் எதிலும் ஒரு தீவிரமான பார்வை தெரிந்தது. இன்னும் சற்று நேரத்தில் விமானம் தரையிறங்கப்போகிறது என்ற பணிப்பெண்ணின் குரலில் நிஜத்திற்கு வந்தாள்.
வீட்டாரை காணும் எண்ணத்தில் பரவசம் கொண்டது மனது. விமானமும் தரையிறங்கியது. எல்லோரும் விலகிச்செல்ல அவள் கண்கள் தேடியது அவனை. அவனும் அவளிடம் ஒரு பை சொல்லி தலையசைப்புடன் விலகினான். பதிலுக்கு சிரித்து பை சொன்னாலும் ஏதோ இனம்புரியாதா கவலையாக இருந்தது. இதெல்லாம் நிறையவே பழகியவன் போல என்றெண்னிக்கொண்டே அவ்விடத்தை விட்டு விலகி நடந்தாள்.
வீட்டாரை கண்டதும் சந்தோசம் பெருகியது. வீட்டை காணப்போகிற மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. எங்காவது நீண்ட பயணம் செல்ல நேர்ந்தால் திரும்பி வரும் வழியெல்லாம் எப்போது சென்று குளித்துவிட்டு ஒரு தூக்கம் போடுவோம் என்று இருக்கும். அவளது கட்டிலை கண்டால் தான் ஒரு நிம்மதியே கிடைக்கும். ஆனால் இந்தமுறை வீட்டை காணுவதே ஒரு நிம்மதி போல் தோன்றியது. அம்மாவின் சமையல் சாப்பிட்டு அம்மா சொல்லும் அக்கம்பக்கத்தவர்களின் கதைகள் கேட்டு எவ்வளவு காலம் ஆகிற்று என்று தோன்றியது.
குடும்பத்தவர்களுடன் அன்றய பொழுது இனிதே கடந்தது. இந்த சந்தோசமும் நிம்மதியும் எங்கு சென்றாலும் கிடைக்காது என்று தோன்றியது. 
அதனால் தானே லண்டனில் கிடைத்த வேலையையும் வேண்டாம் என்று வந்தாள். அந்த வேலையை ஏற்பாடு செய்தவர் திரு அங்கிள் அவள் தங்கியிருந்தது அவரின் வீட்டில்தான். அவர் வேலை செய்தது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான டயமன்ட் ஹோட்டெலில். அதன் உரிமையாளர் ஒரு தமிழராம். உதவி முகாமையாளர் பதவிக்கான வெற்றிடம் நிலவ இவளை கேட்டார். இவள்தான் வேண்டாம் என்று வந்தாள்.
இங்கேயே ஏதாவது வேலை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டாள். எப்படியாவது இந்த ஒருவாரத்திற்குள் ஒரு நல்ல வேலைக்கு போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூங்கச்சென்றாள். கண்களை மூட அவன் வந்தான். சட்டென்று கண்களை திறந்தாள். என்ன இது என்றும் இல்லாதவாறு இன்று மட்டும் இப்படி தன் மனம் சலனப்படுகிறது எல்லாம் இந்த பயணத்தால் வந்த வினை. ம்ஹும் இனி இதை பற்றி நினைக்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டே உறங்க்கிப்போனாள்.
அவள் வந்து சரியாக ஐந்தாவது நாள் திரு அங்கிள் போன் செய்தார். பவிம்மா உனக்கொரு நல்ல வாய்ப்பு. கொழும்பில் உள்ள டயமன்டின் உதவி முகாமையாளர் ஒருவர் இங்கு வரப்போகிறாராம். அந்த இடத்திற்கு பொருத்தமான ஆளை தேடிக்கொண்டிருகிறார்களாம். நான் உன்ன சொன்னேன் ஏற்கனவே உன்ன இங்க சிபாரிசு செய்தேன் இல்லையா, அதான் அவங்களும் உன்ன அங்க வந்து மனேஜ்மென்ட சந்திக்கச்சொன்னாங்க என்றார். இவளுக்கு சந்தோசம் 
ஓகே அங்கிள் என்று நன்றி சொன்னாள். திரு அங்கிளின் குடும்பத்தில் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள் இந்த இரண்டு வருடத்தில் அவளுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவர்களும் கூட...
அடுத்த நாள் காலை ஹொட்டெலை தேடிப்பிடித்து போனாள். அழகாக கட்டப்பட்டிருந்தது. செல்லும் பாதைகள் எல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இங்கு வேலை செய்யக்கிடைத்தால் தான் அதிஸ்டசாலியே என நினைத்தாள்.
வரவேற்பறை பெண் ரொம்பவே அழகாக இருந்தாள். அவளுக்கே உரிய பாணியில் ஆங்கிலத்தில் யாரோ வெளிநாட்டவர்களுடன் பேசிகொண்டிருந்தாள். அவர்கள் விலகிச்சென்றதும் இவள் வந்த விடயத்தை சொன்னாள். அவள் போனில் யாருடனோ பேசிவிட்டு போகுமாறு சொல்லி வழியையும் கூறி அனுப்பினாள்.
அப்பெண் சொன்ன அறைக்கு சென்றாள்.கதவை திறக்க முற்படுகையிலேயே கதவு திறந்துகொண்டது உள்ளே சென்று குட்மோனிங் சொல்ல வாயெடுக்கையில் குரல் தடுமாறியது போன்ற உணர்வு. எம்.டி சீட்டில் ப்ரணவ். மயக்கம் வருவது போல் உணர்ந்தாள். இருக்க சொன்னான். நன்றி சொல்லி இருந்து கொண்டாள் ஒரே படபடப்பாக இருந்தது அவன் ஏதோ கேள்விகள் கேட்டான். என்ன பதில் சொல்லுகிறோம் என்றே தெரியாமல் சொல்லிமுடித்தாள். நாளையில் இருந்து வேலையில் சேர்ந்து கொள்ளும்படி சொன்னான். சரி என்று கூறினாள். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு வெளியேறினால் போதும் என்று தோன்றியது அவளுக்கு. வீடு வந்து சேர்ந்து அம்மாவிடம் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள். 
ஆ..... இவன் எம்.டி ஆக இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லையே. அடுத்து தன்னை ஏற்கனவே கண்டு அறிமுகமானது போலும் காட்டிகொள்ளவில்லை. இவனுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா இல்லையா.. அவனை பார்க்கும் போதெல்லாம் வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில் ஏதோ ஓடித்திரிகிறதே. என்ன செய்யட்டும் என்று மனம் வருந்திக்கொண்டிருக்கையில் அவளது போன் அழைத்தது. ஏதோ நினைவில் காதில் வைத்தாள் மறுமுனையில் நான் ப்ரணவ் என்ற குரலை கேட்டதும் திடுக்கிட்டு போனாள். என்ன சொல்வது என்று தெரியாமல் ஹலோ சொல்லுங்க என்றாள். அவன் ஆ யு ஓகே?? என்றான். இல்ல இன்டைக்கு உங்கள பார்க்கும் போது ஏதோ டென்சனா இருந்தீங்க அதான் கேட்டேன் என்றான். இவளுக்கு ஐயோ என்றிருந்தது கண்டுபிடித்து விட்டானா என்றெண்ணியவாறே ஐம் ஓகே நத்திங் டூ வொறி என்றாள். மீண்டும் அவனே தொடர்ந்தான் அப்ப ஓகே நாளைக்கு வருவீங்கல்ல என்று இழுத்து விட்டு பிறகு இன்னொரு விஷயம் என்றான். ஓகே சொல்லுங்க என்றாள் சிறியதொரு மெளனத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தான் எப்டி சொல்றதுன்னு தெரியல ஐ திங் ஐ லைக் யு என்றான். அவளுக்கு அந்த வார்த்தையை கேட்கையில் வானவில் நூறு உடைந்து தன் மேல் கொட்டியது போன்று இருந்தது. 
தன் மனதை வெளிக்காட்டாமல் மெளனமாகவே இருந்தாள். அவன் தொடர்ந்தான் அன்று உன்னை ப்ளைட்ல பார்த்தபோதே எனக்கு பிடிச்சிருந்தது ஆனா அது சும்மா ஒரு infatuation னு நினைச்சன். அதுக்கு பிறகும் என்னோட மைன்ட் Disturb ஆகிட்டேதான் இருந்திச்சு அப்பவே கதைச்சு ஏதாவது உன்ன பற்றி தெரிஞ்சிருந்திருக்கலாமோ என்றிருந்திச்சு. அப்பதான் நேற்று உன்ன பற்றி திரு அங்கிள் சொன்னதா அப்பா உன்னோட Details அனுப்பினார் பார்த்த உடனே கடவுளே நாம சந்திக்க இந்த வாய்ப்ப குடுத்திருக்கிறதா நினைச்சேன். நான் உன்ன நேசிக்கிறேன் என்றான். உனக்கும் சம்மதம் என்றால் நீ நாளைக்கு நேர என்ன வந்து பார்க்கலாம் இல்லனா நீ உன்னுடைய வொர்க்க பார்க்கலாம் இப்ப நான் வைக்கிறேன் என்று இணைப்பை துண்டித்தான். காதல் இவ்வளவு சீக்கிரம் கைகூடும் என்று நினைக்கவில்லை தன்னை போலவே அவனுக்கும் தோன்றி இருப்பதை நினைத்து நினைத்து பரவசம் கொண்டாள். ஆரம்பத்தில் பன்மையில் அரம்பித்து பின்னர் உரிமையாய் ஒருமையில் குறிப்பிட்டது பிடித்திருந்தது. நாளைக்கு எந்த ஆடை அணிந்து செல்வது, எப்படி அவனை பார்ப்பது, தன் மனம் பற்றி எப்படி சொல்வது என்ற ஆராய்ச்சியில் மூழ்கினாள்


           கதை மூலம்  Sharmila Vinayaham

Sunday 15 March 2015

விதைச்சோளம்



விடுபடும் முயற்சிகளுள் ஒன்றாக மனிதன் விவசாயம் கண்டறிந்தான். ஆனால் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் உழவர்களில் பெரும்பான்மையோர் விலங்குகளுக்கான சுகத்தையும் சுதந்திரத்தையும் கூட இழந்து நிற்கிறார்கள். அப்படி வாழப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றம்தான் இந்த நாட்டுப்பாட்டு.

ஆடி முடிஞ்சிருச்சு
ஆவணியும் கழிஞ்சிருச்சு
சொக்கிகொளம் கோடாங்கி
சொன்னகெடு கடந்திருச்சு

காடு காஞ்சிருச்சு
கத்தாழை கருகிருச்சு
எலந்த முள்ளெல்லாம்
எலையோட உதிந்திருச்சு

வெக்க பொறுக்காம
றெக்க வெந்த குருவியெல்லாம்
வெங்காடு விட்டு
வெகுதூரம் போயிருச்சு

பொட்டு மழை பெய்யலையே
புழுதி அடங்கலையே
உச்சி நனையலையே
உள்காடு உழுகலையே

வெதப்புக்கு விதியிருக்கோ
வெறகாக விதியிருக்கோ
கட்டிவச்ச வெங்கலப்ப
கண்ணீர் வடிச்சிருச்சே

காத்துல ஈரமில்ல
கள்ளியில பாலுமில்ல
எறும்பு குளிச்சேர
இருசொட்டுத் தண்ணியில்ல

மேகம் எறங்கலையே
மின்னல் ஒண்ணுங் காங்கலையே
மேற்க கருக்கலையே
மேகாத்து வீசலையே

* * * * *
தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசையெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில
நெத்தியில ஒத்தமழை

* * * * *
துட்டுள்ள ஆள் தேடிச்
சொந்தமெல்லாம் வாரதுபோல்
சீமைக்குப் போயிருந்த
மேகமெல்லாம் திரும்புதய்யா

வாருமய்யா வாருமய்யா
வருண பகவானே
தீருமய்யா தீருமய்யா
தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

ஒத்தஏரு நான் உழுகத்
தொத்தப்பசு வச்சிருக்கேன்
இன்னும் ஒரு மாட்டுக்கு
எவனப் போய் நான் கேட்டேன்?

ஊரெல்லாம் தேடி
ஏர்மாடு இல்லாட்டி
இருக்கவே இருக்கா
இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

* * * * *

காசு பெருத்தவளே
காரவீட்டுக் கருப்பாயி
தண்ணிவிட்டு எண்ணெயின்னு
தாளிக்கத் தெரிஞ்சவளே

சலவைக்குப் போட்டாச்
சாயம் குலையுமின்னு
சீல தொவைக்காத
சிக்கனத்து மாதரசி

கால்மூட்ட வெதச்சோளம்
கடனாகத் தாதாயி !
கால்மூட்ட கடனுக்கு
முழுமூட்ட அளக்குறண்டி

* * * * *
ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமழை ஊத்துதடி
சாத்துதடி சாத்துதடி
சடைசடையாச் சாத்துதடி

பாழும் மழைக்குப்
பைத்தியமா புடிச்சிருச்சு?
மேகத்தக் கிழிச்சு
மின்னல் கொண்டு தைக்குதடி

முந்தாநாள் வந்த மழை
மூச்சுமுட்டப் பெய்யுதடி
தெசைஏதும் தெரியாம
தெரபோட்டுக் கொட்டுதடி

கூர ஒழுகுதடி
குச்சுவீடு நனையுதடி
ஈரம் பரவுதடி
ஈரக்கொல நடுங்குதடி

வெள்ளம் சுத்திநின்னு
வீட்ட இழுக்குதடி
ஸ்தியில சரிபாதி
அடிச்சிக்கிட்டுப் போகுதடி

குடி கெடுத்த காத்து
கூர பிரிக்குதடி
மழைத்தண்ணி ஊறி
மஞ்சுவரு கரையுதடி

* * * * *

நாடு நடுங்குதய்யா
நச்சுமழை போதுமய்யா
வெதவெதைக்க வேணும்
வெயில்கொண்டு வாருமய்யா

மழையும் வெறிக்க
மசமசன்னு வெயிலடிக்க
மூலையில வச்சிருந்த
மூட்டையப் போய் நான் பிரிக்க

வெதச்சோளம் நனைஞ்சிருச்சே
வெட்டியாய் பூத்திருச்சே
மொளைக்காத படிக்கு
மொளைகட்டிப் போயிருச்சே

ஏர்புடிக்கும் சாதிக்கு
இதுவேதான் தலையெழுத்தா?
விதிமுடிஞ்ச ஆளுக்கே
வெவசாயம் எழுதிருக்கா?

காஞ்சு கெடக்குதுன்னு
கடவுளுக்கு மனுச்செஞ்சா
பேஞ்சு கெடுத்திருச்சே
பெருமாளே என்னபண்ண?

                                                  வைரமுத்து

மௌன பூகம்பம்



(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.)
அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

                                வைரமுத்து
                      

சிரிப்பு



வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

* * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

* * * * *

காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஜாதி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!


                                        வைரமுத்து